Saturday, July 4, 2020

பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இந்தியாவில் பி8 மற்றும் ஏ2 என அழைக்கப்படும் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், பி8 மாடலில் 1900 வாட், ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் 1.45 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்த முடியும். இந்த பி8 மாடல் லீட்-ஆசிட் மாடல், லித்தியம் அயன் மாடல் மற்றும் எல்1 தொழில்நுட்பம் கொண்ட மாடல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டாப் மாடலில் நேவிகேஷன் அசிஸ்ட், ரைட் மெட்ரிக்ஸ், ஜியோ ஃபென்சிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிகாஸ் ஏ2 மாடலில் 250 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய 1.29 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிகாஸ் பி8 மற்றும் ஏ2 ஸ்கூட்டர்கள் மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. இவை புளூ, வைட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவை, ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ. 1.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
எல்.ஜி நிறுவனத்தின் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்.ஜி நிறுவனத்தின் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள முயற்சியாக வெளியாகியுள்ளது. பிராஜக்ட் பி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்த காப்புரிமை அடிப்படையில் பிராஜக்ட் பி ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் நீளும் வகையிலும், தேவையற்ற போது மடித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோடோடைப் மாடலை எல்ஜி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ரோபிள் சாதனம் ஆகும். முன்னதாக எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டிவி ஆர் மாடலை 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிப்படுத்தியது. பிராஜக்ட் பி திட்டத்தில் வளையும் தன்மை கொண்ட ஒஎல்இடி பேனலை எல்ஜி உருவாக்கவில்லை. இதனை சீன டிஸ்ப்ளே உற்பத்தி செய்யும் பிஒஇ நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
டார்க் மோட் வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

டார்க் மோட் வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த அம்சத்தை பெற ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும்.
கணினியில் வாட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. வாட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்களில் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

* திடுக் தகவல்கள் அம்பலம்: கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்துக்கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக வியாபாரிகள் இறந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்ெபக்டர் தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறியதாகவும், சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இந்நிலையில் நேற்றிரவு விளாத்திகுளம் அருகே பூசனூரில் உறவினருடன் பைக்கில் வந்த போலீஸ்காரர் முத்துராஜை விளாத்திகுளம் டிஎஸ்பி பீர்முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் மடக்கி கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.சிபிசிஐடி போலீசார் அவரிடம் விடியவிடிய தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம், விசாரணையின் போது அவரை யார், யார் தாக்கினர்? சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடந்த இடம், உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை விசாரணை முடிந்ததும், அவரை உடல் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை
சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் கூறியதாவது:சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம். யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை. பெண் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் விசாரணையில் இல்லை. விசாரணை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம் உள்ளிட்ட சில இடங்களின் சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்கள் மீதும் புகார்கள் வந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்துவோம் என்றார்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்கள்
இந்நிலையில் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மாலை திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட சிறையில் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இணையதளங்கள், சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இணையதளங்கள், சமூக ஊடகங்களில் சிலர் தவறான கருத்துகள் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அது பாதிக்கும்.
சிபிசிஐடி இந்த வழக்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரித்து வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். இந்த வழக்கு சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிரக் கூடாது என சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
  • பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • பிபிசி தமிழ் ட்விட்டர்
  • பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • பிபிசி தமிழ் யு டியூப்
source: bbc.com/tamil
சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும். தொழில்நுட்ப சமுதாயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'', என்று பிரதமர் கூறினார்.
ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகம்

ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகம்

தினமலர்:  புதுடில்லி: ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு போன்ற பாதுகாப்பின்மை காரணமாக ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஜூம் செயலிக்கு பதிலாக 'ஜியோமீட்' என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் போலவே ஜியோ மீட் செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளை ஏற்க முடியும். அதேநேரம் ஜூம் செயலி போல இதில் 40 நிமிடம் மட்டும் தான் என்ற நேர வரம்பு இல்லை. 24 மணிநேரமும் நாம் வீடியோ அழைப்புகளை நீட்டிக்கலாம்.ஜியோமீட் மூலம் மேற்கொள்ளப்படும் அனைதது டிஜிட்டல் சந்திப்புகளுக்கும் பாஸ்வேர்டு மற்றும் என்கிரிப்சன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜியோ மீட்டை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இது லட்சம் பதிவிறக்கங்களை கடந்து விட்டது. ஜியோ மீட் மூலம் 'மேட் இன் இந்தியா' என்ற ஹேஷ்டேக் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஃபேஸ்புக் மற்றும் இன்டெல் நிறுவனங்களில் முதலீட்டைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் சாம்ராஜியத்தையும் விரிவுபடுத்தி உள்ளது.
“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் பாபர் அசாம். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் ஆட்டத் திறன் மற்றும் பேட்டிங் ஸ்டைலை வைத்துப் பலரும் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவது வழக்கம். இப்படி பலர் ஒப்பிட்டு வருவது குறித்துப் பேசியுள்ள அசாம், “என்னை யாரோடாவது ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களோடு ஒப்பிடுங்கள். விராட் கோலியோடு மட்டுமே ஒப்பிட வேண்டாம். எங்கள் நாட்டிலும் ஜாவத் மியாண்டட், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் உள்ளிட்ட பல லெஜண்டுகள் உள்ளனர். இதைப் போன்ற ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டால், அதை நான் மிகவும் விரும்புவேன். அது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 
Babar Azam is very Close to Being in the Same Class as Virat Kohli" Says  Misbah Ul Haq - EssentiallySports
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாபர் அசாம். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலி. 
25 வயதாகும் அசாம், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் 50 பேட்டிங் சராசரிக்கு மேல் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 45-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமும் உள்ளார். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.